3197. கன்றொருக்கையி லேந்திநல்விள
       வின்கனிபட நூறியுஞ்
சென்றொருக்கிய மாமறைப்பொரு
     டேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்னடி
     யும்முடியவை காண்கிலார்
பின்றருக்கிய தண்பொழிற்பிர
     மாபுரத்தரன் பெற்றியே.                 8

     8. பொ-ரை: ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி
விளமரத்தின் கனியை அழித்த திருமாலும், தொகுக்கப்பட்ட
வேதங்களின் பொருளை நன்கு கற்ற பிரமனும், அன்று தன்காற்
பெருவிரலை ஊன்றி இராவணனைக் கயிலையின்கீழ் நெருக்கிய
சிவபெருமானுடைய திருவடியையும், திருமுடியையும் தேடியும்
காணாதவராயினர். அப்பெருமான் அருள் தன்மையும், ஆற்றலும்
கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த சோலைகளையுடைய
திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: ஒருகை, ஒருக்கை என இசை நோக்கி ஒற்றுமிகுந்தது.
நூறி - அழித்தவன்; பெயர்ச்சொல். ஒருக்கிய - ஒருங்கு சேர்ந்த,
தொகுத்த, (மாமறை) பின்தருக்கிய. இந்தப் பதிகத்தில் அரக்கனையும்
அடி, முடி தேடிய இருவரையும் ஒரு பாசுரத்தில் கூறியதுணர்க.