3198. உண்டுடுக்கைவிட் டார்களும்முயர்
       கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டடக்கு சொற்பேசும்அப்பரி
     வொன்றிலார்கள்சொற் கொள்ளன்மின்
தண்டொடக்குவன் சூலமுந்தழன்
     மாமழுப்படை தன்கையிற்
கொண்டொடுக்கிய மைந்தனெம்பிர
     மாபுரத்துறை கூத்தனே.                 9

     9. பொ-ரை: உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட
சமணர்களும், மண்டை என்னும் பாத்திரத்தில் கஞ்சியேற்று
உண்ணும் புத்தர்களும் மக்களிடம் பரிவில்லாதவர்கள்.
உயர்ந்தவையும் தொன்றுதொட்டு வருவனவுமாகிய வேத ஆகம
நூல்களைப் பழித்துப் பேசுபவர். அவர்கள் சொற்களைக் கொள்ள
வேண்டா. வீணை,அக்குமாலை, சூலம், நெருப்பு, பெரிய மழுப்படை
இவற்றைத் தன்கையில் கொண்டு இவ்வுலகமனைத்தையும் ஒடுக்கி
அருளும் வல்லமையுடையவன் எம் திருப்பிரமபுரத்து
வீற்றிருந்தருளும் கூத்தனாகிய சிவபெருமானேயாவான். அவனை
வணங்கிப் போற்றி உய்வீர்களாக!

     கு-ரை: உடுக்கை - ஆடை. பண்டு அடக்கு சொல் -
தொன்று தொட்டு வந்து சற்சமயக் கருத்துக்களை. தண்டு (ஒடு) -
யோக தண்டத்துடன். அக்கு - செபமாலை, இவை யோகரூபங்
குறித்தவை. ஒடுக்கிய - உமாதேவியாரை இடப்பாகத்தே சேர்த்த.
மைந்தன் - ஆண்மையுடையோன். இது போகரூபங் குறித்தது.
ஒடுக்கிய என்ற வினைக்குச் செயப்படுபொருள்
வருவித்துரைக்கப்பட்டது. ஆக இறைவனது மூன்று ரூபமும்
இதனுள் அமைந்தமை காண்க. ‘யோகியாய்’ (சிவஞானசித்தியார். 50)
ஒருவனே மூன்றுருவும் கொள்ளுதல் அவனது திருவிளையாடல்
என்பார் ‘கூத்தன்’ என்றார்.