3204. |
விரவிலாதுமைக் கேட்கின்றேன்அடி |
|
விரும்பியாட்செய்வீர்
விளம்புமின்
கரையெலாந்திரை மண்டுகாவிரிக்
கண்டியூருறை வீரட்டன்
முரவமொந்தை முழாவொலிக்க
முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல்
நஞ்சமுண்ட பரிசதே. 5 |
5.
பொ-ரை: அடியார் நடுவுள் கலந்திருக்கப் பெறாமையால்
இவற்றை வினவுகின்றேன். இறைவனின் திருவடிகட்கு விரும்பிப்
பணிசெய்யும் அடியவர்களே! விளம்புவீராக. அலைகள் மோதுகின்ற
காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும்
வீரட்டநாதன், முரவு, மொந்தை, முழவு முதலான வாத்தியங்கள்
முழங்க, பேய்க்கணங்களும், பூதகணங்களும் சூழ்ந்து நிற்க, தன்னை
வழிபட்ட தேவர்கள் பொருட்டுப் பெரிய பாற்கடலில் தோன்றிய
நஞ்சினை உண்ட தன்மைதான் என்கொல்?.
கு-ரை:
விரவு இலாது - (அடியார் நடுவுள்) கலந்திருக்கப்
பெறாமையினால் இவற்றை வினவுகிறேன். இறைவன் கிளம்பும்
பொழுது பூதகணம் முதலிய கணங்களோடு பேய்க்கணங்களும்
போவன ஆதலின். பேயொடுங்கூடி என்ற தொடரில் பேய் என்து
உபலட்சணம் ஆகலின் பேய் முதலிய கணங்களோடும் என்க.
வானவர்க்காக விடத்தை உண்பானேன்? உண்ணச் சோறின்றி
நஞ்சுண்டவன் கடவுளாவானா? விடமுண்டவன் சாவவில்லை
என்பது நம்பத்தகுமா? எனப் பிற மதத்தினர் கூறுவது
அம்பரமாம் புள்ளித் தோல் ஆலாலம் ஆரமுதம் என்னும்
திருவாசகத்தால் அறிக.
|