| 
         
          | 3208. | பெருமையேசர ணாகவாழ்வுறு |   
          |  | மாந்தர்காளிறை 
            பேசுமின் கருமையார்பொழில் சூழுந்தண்வயற்
 கண்டியூருறை வீரட்டன்
 ஒருமையாலுயர் மாலுமற்றை
 மலரவன்உணர்ந் தேத்தவே
 அருமையாலவ ருக்குயர்ந்தெரி
 யாகிநின்றவத் தன்மையே.          9
 |  
             9. 
        பொ-ரை: சிவபெருமானுடைய பெருமையைப் புகழ்ந்து கூறி, அவனைச் சரண்புகுந்து அவனருளால் வாழும் மாந்தர்காள்!
 விடை கூறுவீர்களாக! மரங்களின் அடர்த்தியால் வெயில் நுழையாது
 இருண்டு விளங்கும் சோலைகள் சூழ்ந்த, குளிர்ச்சியான
 வயல்களையுடைய திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளுகின்ற
 வீரட்டநாதன், திருமாலும், பிரமனும் சிவபெருமானின்
 முழுமுதல்தன்மையை உணர்ந்து போற்றும்படி, அவர்கள்
 காண்பதற்கு அரியவனாய் உயர்ந்து நெருப்புமலையாய் நின்ற
 தன்மை என் கொல்?
       கு-ரை: 
        மரச்செறிவால் வெயில். நுழையாமையால் கருமை ஆர்பொழில் என்றார். "வெயில் நுழைபு அறியாக் குயின் நுழை
 பொதும்பர்" என்பது மணிமேகலை.
       ஒருமையால் ... 
        ... அத்தன்மையே அருமையால் - காண்டற்கரிய தன்மையால் அவர்க்கு உயர்ந்து, எரியாகிநின்ற,
 ஓங்கி அனலாகி நின்ற அத்தன்மையை. இறைபேசுமின் - பிரம்மா,
 விட்டுணு, உருத்திரனென்று உடனெண்ணப்படுகின்ற கடவுள்
 அவரினும் மிக்கோனாய் அழலாகிநின்றது ஏன்?
 |