3210. கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர்
       வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக்
     கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம்
     பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
     உரைசெய்வார் உயர்ந்தார்களே.         11

     11. பொ-ரை: அன்பர்தம் கருத்தாக விளங்குபவனாய்,
சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூர் வீரட்டானத்தில் பிறரால்
காணப்பெறாது மறைந்திருந்து மனத்தைக் கவரும் கள்வனாய்,
சொல்லின் பொருளாக இருக்கும், அப்பெருமானின் திறத்தினை
அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழும் முறையில்
சீகாழியில் அவதரித்த, இறைவனின் இயல்புகளை நன்கு உணர்ந்த
ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை
ஒருவராகத் தனித்தும், பலராகச் சேர்ந்தும் ஓதவல்லவர்கள்
உயர்ந்தவர்கள் ஆவர்.

     கு-ரை: கருத்தனை - "மனத்துள் நின்ற கருத்தானை".
கள்வனை - மேற்கூறிய காரணங்களால் இத்தன்மையன் இறைவன்
ஆகான் எனச் சைவம் சாரும் ஊழிலார் மறுக்கும் வண்ணம்,
மறைந்து நிற்றலின் கள்வன் என்றார். வினாவுரையாகிய சம்பந்தன்
நிரப்பிய செந்தமிழ் பாடுவார் உயர்ந்தார்கள்.