3214. சந்துசேனனு மிந்துசேனனுந்
       தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனு
     முதலதாகிய பெயர்கொளா
மந்திபோற்றிரிந் தாரியத்தொடு
     செந்தமிழ்ப்பய னறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்றிரு
     வாலவாயர னிற்கவே.                  4

     4. பொ-ரை: சந்தசேனன், இந்து சேனன், தருமசேனன்,
மாசுடைய கந்தசேனன், கனகசேனன் முதலான பெயர்களைக்
கொண்டு மந்திபோல் திரிந்து, வடமொழி, தென்மொழிகளைக்
கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள் எனவும், சைவமே
சீரிய சமயநெறி என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து
திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன். திருவாலவாயரன்
என்னுள்ளிருந்து அருள்புரிவார்.

     கு-ரை: மந்தி - பெண் குரங்கு. ஆரியத்தொடு செந்தமிழ்ப்
பயன் யாதெனின், சிவனே முழுமுதற்கடவுள் எனவும், சைவநெறியே
சீரிய நெறியெனவும் ஆற்றல் அறியாததால் அகக் கண் இழந்தவர்.
அந்தகர் - குருடர். நெறி தெரியாது தியங்குதல் அவ்வழிச்சென்று
இடர்ப்படல் உடைமை, குருடர் செயல்.