3215. கூட்டினார்கி ளியின்விருத்த
       முரைத்ததோரொலி யின்றொழிற்
பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு
     மெக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவரு மாடெலாங்கவர்
     கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்றிரு
     வாலவாயர னிற்கவே.                 5

     5. பொ-ரை: கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு
ஏற்ப, கிளிவிருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை
மெய்யென்று சொல்லி ஏமாற்றுகிறவர்கட்கும், பல தருமங்களைச்
செய்தவர்களாக வெளியில் காட்டி அவற்றால் வரும்
செல்வங்களைக்கவரும் கீழோர்கட்கும் இரக்கமில்லாத குறும்பர்
கட்கும் யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்றும் நின்று
அருள்புரிவார்.

     கு-ரை: கிளிவிருத்தம், எலி விருத்தம் முதலிய சுவடிகளை.
மெய் சொலி - மெய்யென்று சொல்லி. பக்கம் - ஓரமான வழியே
செல்லுகின்ற எக்கர் பல அறம் காட்டி வரும் மாடு எலாம்
கவர்கையர் - பல தருமங்களும் செய்தவர்களாக வெளிக்குக்காட்டி
அதனால் வரும்நிரைப் பொருள்களை எல்லாம் கவர்கின்றவர்.
கசிவு - மன இரக்கம். ஒன்று இலா சிறிதும் இல்லாத. சேட்டை
- மூதேவி, குறும்பு . எக்கர் தங்களை. கையரை என்பதில் உள்ள
இரண்டனுருபுகள் நான்கன் பொருளில் வந்ததனால் வேற்றுமை
மயக்கம்.