3219. பூமகற்கு மரிக்குமோர்வரு
       புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போறலை
     யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
     யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்றிரு
     வாலவாயர னிற்கவே.               9

     9. பொ-ரை: பிரமனும், திருமாலும் அறியவொண்ணாத
புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது,
இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக் களைந்து,
பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி,
பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன்
அல்லேன், திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால்.

     கு-ரை: பூமகன் - பிரமன், ஒய்வு அரு - நினைத்தற்கும்
அரிய. சாம் அவத்தையினார் - இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்யும்
நிலையுதயடையோர். அவத்தை - நிலைமை. வேம் - வருந்துகின்ற.
பிறவினை விகுதி குன்றி நின்றது. மெய் - உடம்பில், பொடி அட்டி
- நீராடாமையால் புழுதி படிந்து வாய் சகதிக்கு நிகர் ஆவார்.