3222. கல்லானீழல், அல்லாத்தேவை
  நல்லார்பேணார், அல்லோநாமே.     1

     1. பொ-ரை: கல்லால மரத்தின் நிழலில் சனகாதி
முனிவர்கட்கு அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப்
பிறிதொரு தெய்வத்தை மெய்யுணர்ந்த ஞானிகள் பொருளாகக்
கொள்ளார். நாமும் அவ்வாறே சிவனையன்றி வேறு தெய்வத்தை
வழிபடோம்.

     கு-ரை: கல்லால் நீழலில் அல்லாத்தேவை - கல்லாலின்
நிழலின் இருக்கும் தெய்வமாகிய சிவம் அல்லாத பிறிதொரு
தெய்வத்தை. நல்லார் - மெய்யுணர்ந்த ஞானிகள். பேணார் -
பொருளாகக் கொள்ளார். (ஆகையால்) நாமும் அல்லோம் -
நாங்களும் அவற்றைப் பொருட்படுத்தோம்.