3233. கருவார்கச்சித், திருவேகம்பத்
  தொருவாவென்ன, மருவாவினையே.       1

     1. பொ-ரை: யாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்கும்
திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானைப்
போற்றி வணங்க வினைவந்து சாராது.

     கு-ரை: கரு - கர்ப்பம் ...... ஏக ஆம்பரம் - ஏகம்பம் என
மரீஇயிற்று. ஒற்றை மாமரத்தினடி, கோயிலின் பெயர். வினை -
வினைகள், பால்பகா அஃறிணைப்பெயர்.