3235. கலியார்கச்சி, மலியேகம்பம்
  பலியாற்போற்ற, நலியாவினையே.       3

     3. பொ-ரை: விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன்
எப்பொழுதும் விளங்கும் கச்சியில் வீற்றிருந்தருளுகின்ற
திருவேகம்பநாதரைப் பூசைக்குரிய பொருள்களைக் கொண்டு பூசை
செய்து போற்றி வழிபடத் தீவினையால் வரும் துன்பம் இல்லை.

     கு-ரை: கலி ஆர் - ஓசைமிக்குடைய கச்சி, இதனை
'மலிதேரான்' என்ற தண்டியலங்கார உதாரணச் செய்யுளாலும்,
பெரிய புராணத்தாலும் அறியலாம். பலி - பூசைக்குரிய பொருள்;
காரிய ஆகுபெயர்.