3247. |
கதிரார் திங்கள் வாண்முக |
|
மாதர்பாடக்
கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ
ராடன்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை
எழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்க ணேறுடை
யாதிமூர்த்தி யல்லனே. 4 |
4.
பொ-ரை: கதிர்வீசும் சந்திரனைப் போன்ற
ஒளிபொருந்திய முகம்கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட,
நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச்
சூடி, ஆடுகின்ற முக்கண்ணர் ஆவார். அவர் கங்கையும்,
சடைமுடியும் கொண்டவராய் அழகுடைய திருச்சிற்றேமத்தில்
வீற்றிருந்தருளுபவர். அவர், கழுத்தில் கட்டிய சதங்கைமணி
ஒலிக்கும், பசிய கண்களையுடைய இடபத்தை வாகனமாகக்
கொண்ட ஆதிமூர்த்தி அல்லரோ?
கு-ரை:
முதிரார் திங்கள் - முதிராத் திங்கள் என்று
பாடமிருக்க வேண்டும். இளம்பிறைச் சந்திரன் என்று அப்பொருள்
கோடலுக்கு. இனி இப்பாடத்துக்கு முதிர் - முதிர்தல். ஆர் -
நிறைந்துவிட்ட. இனி முதிர்தலில்லாத இன்னும் பிறைச்
சந்திரனாகவேயுள்ள, திங்கள் என்று பொருள் கொள்ளல் தகும்.
எதிர் ஆர்புனல் அம்புன்சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் -
அலைமோதும் எதிரொலியையுடைய (கங்கை) நீரைத் தாங்கிய
அழகிய சிறிய சடையின் அழகு பொருந்திய சிற்றேமத்துக் கடவுள்.
அதிர்தல் (சதங்கை மணி முதலியவற்றால்) ஒலித்தல். ஆர் -
பொருந்திய, பைங்கண் ஏறு - பசிய கண்களையுடைய விடை.
|