3252. தனிவெண்டிங்கள் வாண்முக
       மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ
     ராடன்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தா
     னலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா
     மழுவாட்செல்வ னல்லனே.          9

     9. பொ-ரை: ஒப்பற்ற வெண்ணிறச் சந்திரன் போன்று
ஒளிரும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசையோடு பாட, தாழ்ந்த
சடையில் இளம்பிறைச் சந்திரனைச் சூடித்திருநடனம் செய்கின்ற
மிகப் பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தாமரைமலரில் வீற்றிருக்கும்
பிரமனும், நீலரத்தினம் போன்ற நிறமுடைய திருமாலும்
காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வர்
அல்லரோ?

     கு-ரை: தனி - ஒப்பற்ற. தணி என்று பாடமாயின் - குளிர்ந்த
என்று பொருள் கொள்ளலாம். துணி - துண்டம். துண்ட வெண்பிறை
(நிறைமதியின் ஒரு துண்டம்) மணி - நீல ரத்தினம். "மழுவாட்
செல்வர்" என்பர் அப்பர் சுவாமிகள்.