3270. ஏரி னாருல கத்திமை யோரொடும்
  பாரி னாருட னேபர வப்படுங்
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.        5

     5. பொ-ரை: எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய
தேவர்களோடு, மண்ணுலக மக்களாலும் சேர்ந்து
தொழப்படுகின்றவனும், மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த
திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிறப்புடையவனுமாகிய
சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள்.

     கு-ரை: ஏரின் ஆர் - அழகால் மிகுந்த. உலகத்த -
விண்ணுலகத்திலுள்ள. இமையோரோடும் - தேவர்களுடனே;
மண்ணுலகத்திலுள்ள யாவரும் கலந்து துதிக்கின்ற. காரின் -
மேகத்தினால். ஆர் - படியப்பட்ட. சோலை ஆர் என்பதில்
செயப்பாட்டு வினைவிகுதி குன்றியது. சீரினார் - சிறப்பை
உடையவர்.