3277. அந்த மாயுல காதியு மாயினான்
  வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்றிரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.   1

     1. பொ-ரை: சிவபெருமான் உலகத்தின் ஒடுக்கத்திற்கும்,
தோற்றத்திற்கும் நிமித்த காரணன். திருவெண்ணீறு பூசிய வேத
நாயகன். என் சிந்தையில் புகுந்து விளங்குபவன். திருவாரூரில்
வீற்றிருந்தருளும் எம் தந்தையான அவன் என்னை ஏற்று அருள்
புரிவானோ!

     கு-ரை: உலகின் முடிவும் முதலும் ஆகியவன் என்பது
உலகின் தோற்ற ஒடுக்கங்கட்கும் நிமித்தகாரணனாய் உள்ளவன்.
எம் எந்தை - எங்கள் அனைவருக்கும் உரிய என் தந்தை. எம்
என்றது பலதிறத்தினராகிய அடியவரை. அது "உருத்திர பல்
கணத்தார்""பல்லடியார்" என்பனவற்றால் அறிக.