3278. |
கருத்த னேகரு தார்புர மூன்றெய்த |
|
ஒருத்த னேயுமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு வாரூரெந் தீவண்ண
அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே. 2 |
2.
பொ-ரை: இறைவர் என் கருத்திலிருப்பவர். தம்மைக்
கருதிப் போற்றாத பகையசுரர்களின் மூன்று புரங்களையும்
அக்கினிக்கணை தொடுத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர்.
ஒப்பற்றவர், உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக்
கொண்டவர். தூயவர். திருவாரூரில் வீற்றிருந்தருளும் தீ வண்ணர்.
எப்பொருட்கும் விளக்கமாய் அமைந்த பெரும்பொருள். அவர்
என்னை அஞ்சற்க என்று மொழியாததன் காரணம் யாதோ?
கு-ரை:
கருத்தனே - கருத்திலிருப்பவனே. "வாயானை
மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை" (தி.6 பா.19. பா.8)
என்றதுங் காண்க. திருத்தம் - தீர்த்தம்; தூய்மை. "திருத்தமாம்
பொய்கை" என்புழியுங் காண்க. திருத்தன் - தூயவன். இனித்திருத்த
சொரூபமானவன் என்றலும் ஒன்று. என் - எதனால்.
|