3279. |
மறையன் மாமுனி வன்மரு வார்புரம் |
|
இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூரெம்
இறைவன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ. 3 |
3.
பொ-ரை: இறைவன், வேதங்களை அருளிச் செய்து
வேதப்பொருளாகவும் விளங்குபவன். பெரிய தவத்தன்.
பகையசுரர்களின் முப்புரங்களை நொடிப்பொழுதில் எரியூட்டியவன்.
சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த
திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன் என்னை அடியவனாக
ஏற்றுக் கொள்வானோ!
கு-ரை:
இறையில் - சிறு தீப்பொறியால். மாத்திரையில் - ஒரு
நொடிப்போதில். இறை - சிறியது, தீப்பொறிக்கு அளவையாகுபெயர்.
இறையில்; இல் - வேற்றுமை உருபுமயக்கம். முனிவன், மருவார்புரம்
- பகைவரது புரங்கள் (எரி ஊட்டினான்).
|