3281. குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
  விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு வாரூரான்
வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.   5

     5. பொ-ரை: குருந்த மரத்தில் ஏறிப்படரும் மாதவியும்,
விரிந்து மலர்ந்த நறுமணம் கமழும் தேனுடைய கொன்றை
மரங்களும் திகழ, மாடமாளிகைகள் சூழ்ந்த திருவாரூரில்
வீற்றிருந்தருளும் இறைவர் நான் வருந்தும்போது, என்னை
வருந்தாதே என்றுரைத்து அருள் புரிவாரோ!

     கு-ரை: வாடல் - வாடாதே, வாடற்க, 'மகனெனல்' என்ற
திருக்குறளிற் போல, அல்ஈறு, எதிர்மறை வியங்கோள் குறித்தது.
இப்பாசுரத்தின் முதலீரடிகளால் மாடங்களின் அருகே
பூந்தோட்டங்கள் இருந்தமை புலப்படுகிறது.