3283. வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
  துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு வாரூரான்
இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ.  7

     7. பொ-ரை: வளையலணிந்த கைகளையுடைய உமாதேவியை
ஒரு பாகமாகக் கொண்ட இறைவன், தன்னை எதிர்த்து வந்த
யானையானது கலங்குமாறு அடர்த்து அதன் தோலை உரித்துப்
போர்த்திக் கொண்டவன், குளிர்ந்த புனல் சூழ்ந்த திருவாரூரில்
வீற்றிருந்தருளும் இறைவன், இளைத்து வருந்தும் காலத்தில் என்னை
ஏற்று அருள் புரிவானோ!

     கு-ரை: யானைதுயர்படப் போர்த்தவன் - யானை துயர்பட
உரித்து என ஒரு சொல் வருவித்துரைக்க. திளைக்கும் -
நீராடுதற்குரிய.