3284. இலங்கை மன்ன னிருபது தோளிறக்
  கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ்திரு வாரூரான்
அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ.      8

     8. பொ-ரை: இலங்கை வேந்தனான இராவணனுடைய
இருபது தோள்களும் நொறுங்கிக் கலங்கத் தன் காற்பெருவிரலை
ஊன்றியவர் இறைவர். வலிமையுடைய பெரிய மதில்கள் சூழ்ந்த
திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் எனக்குப் பெருமை
சேர்க்கும் மாலை தந்து அருளி, நான் வருந்தும் காலத்தில்
அஞ்சாதே என்று அபயம் அளித்துக் காப்பாரோ!

     கு-ரை: தோளிறவும். அவன் கலங்கவும். கடை - அவனது
(வலிமையின்) முடிவை. அலங்கல் - மாலை.