3289. விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
  கமுத நீழலக லாததோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருவாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.   2

     2. பொ-ரை: கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய
சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே.
நும் பணி ஆனது அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி
நீழலை விட்டு அகலாத செல்வமாகும். வெண்ணிற முல்லை மணம்
கமழ்கின்ற திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் இறைவன் அமுதம்
போன்று இனிமை தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப்
போன்றசிவந்த வண்ணமாகும்.

     கு-ரை: விமுதம் - விஸ்மிதம் என்னும் வடசொல்லின் திரிபு.
கங்கையை அடக்கிய ஆச்சரியம். விமுதவல்ல சடையான் வினை
- சிவபெருமானுக்கு அடியவர் செய்யும் திருத்தொண்டுகள்
உள்குவார்க்கு - நினைக்கின்ற தொண்டர்களுக்கு. அமுதநீழல் -
அமிர்தம் போல இன்பம் விளைக்கும் திருவடிநீழல். அகலாததோர்
செல்வம் - அழியாத செல்வம்; "சென்றடையாத திரு". கம் - மணம்.
வெண்மை, முதம் - உவகை. கமுதமுல்லை:- வெண்மையும்,
மணமும், உவகை செய்வதும் முல்லைக்கும் உள்ளன.