3299. மத்த யானையின் ஈருரி மூடிய
  அத்த னேயணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.           2

     2. பொ-ரை: மதம் பொருந்திய யானையின் தோலை
உரித்துப் போர்த்திய அத்தனே! அழகிய ஆலவாயில் விளங்கும்
நாதனே! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து
அழிப்பதற்குத் திருவுள்ளம் யாதோ? உரைப்பாயாக.

     கு-ரை: மத்தம் - மயக்கம், மதங்கொண்டமையாலுண்டாவது.
ஈர் -உரிக்கப்பட்ட. திருவுள்ளமே, பணி சொல்லி அருள்வீராக.
பொய்த்த வன் தவவேடத்தர் - பொய்யாகிய வலிய
தவவேடத்தையுடையவர். சித்தர் - மேல் பாசுர உரையால் அறிக.
“நிற்பதுபோல் நிலையிலா நெஞ்சு” என்பது மூன்றாம் அடியிற்
குறித்த பொருள். அதனை “இனம் போன்று இனமல்லார் கேண்மை” எனவரும் திருக்குறளால் அறிக.