3303. நாறு சேர்வயற் றண்டலை மிண்டிய
  தேற லார்திரு வாலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு உள்ளமே.            6

     6. பொ-ரை: நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களிலும்,
சோலைகளிலும் பெருக்கெடுத்து வழியும் தேன் நிறைந்த
திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! பெருமையில்லாத
தவத்தைப் புரியும் முரடர்களாகிய சமணர்களைச் சினந்து வாது
செய்ய உன்னுடைய திருவுள்ளம் யாது?
சொல்லியருள்வாயாக!

     கு-ரை: நாறு - நாற்றுக்கள். சேர் - பொருந்திய (வயல்)
நாறு(தல்) கமழ்தல். தண்டலை - சோலை. மிண்டிய தேறல் ஆர் -
பெருக்கெடுக்கும் தேன் நிறைந்த. வயல்களிற் கரையோரம் உள்ள
தாமரை முதலிய மலர்களாலும், சோலைகளில் உள்ள கொன்றை
முதலிய மலர்களாலும் தேன் பெருக்கெடுக்கின்றது என்பதாம். வீறு
- பெருமை. மோட்டு - முரட்டுத்தன்மை யுடையவர்கள். வேடர்
கொலைத் தொழிலில் அநுபவமுடையவர்.