3304. பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும்
  தொண்ட ருக்கெளி யாய்திரு வாலவாய்
அண்ட னேயமண் கையரை வாதினில்
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.         7

     7.பொ-ரை: தொன்றுதொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால்
உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு
எளியவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே! அண்டப்
பொருளாக விளங்கும் பெருமையுடையவரே! சமணர்களை வாதில்
வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன். உமது திருவுளம் யாது?

     கு-ரை: பண்டு - தொன்று தொட்டு. அடித்தவம் - அடிப்பட்ட
தவம் ‘பழவடியார்’ திருப்பல்லாண்டு. அண்டன் - தேவன். செண்டு
அடித்து -வளைத்து அடித்து.