3311. முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
  குழுவி னான்குல வுங்கையி லேந்திய
மழுவி னானுறை யும்மழ பாடியைத்
தொழுமி னுந்துய ரானவை தீரவே.           3

     3. பொ-ரை: இறைவன் முழவு என்னும் வாத்தியம்
உடையவன். சுடுகாட்டில் உறையும் பேய்க்கணத்துடன் குலவி
நடனம்புரிபவன். அழகிய கையில் மழுப்படையை உடையவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை உங்கள்
துன்பம் எல்லாம் நீங்கும்படி தொழுது போற்றுங்கள்.

     கு-ரை: குழு - கூட்டம். குலவும் - விளங்குகின்ற. (நும்
துயரானவை தீரத்) தொழுமின் - வணங்குங்கள். ஆனவை
சொல்லுருபு. முழவின் - முழவு என்னும் வாத்தியத்தால். ஆல் -
ஆராவாரிக்கின்ற; பேய்க்கணங்களின் குழு.