3312. கலையி னான்மறை யான்கதி யாகிய
  மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.      4

     4. பொ-ரை: இறைவன் ஆயகலைகள் அறுபத்துநான்கு
ஆனவர். நான்கு மறைகள் ஆகியவன். உயிர்கள் சரண்புகும்
இடமாகிய கயிலை மலையினை உடையவன். பகையசுரர்களின்
திரிபுரங்களை எரியுண்ணுமாறு அக்கினிக்கணையை ஏவிய,
மேருமலையை வில்லாக உடையவன். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் திருமழபாடியைத் தலையினால் வணங்கிப்
போற்றத் தவத்தின் பலன் கைகூடும்.

     கு-ரை: கலை - சாத்திரம். அவை அறுபத்து நான்கு என்ப.
கதி ஆகிய - சரணம் புகும் இடம் ஆகிய. மலையினான் - கயிலை
மலையை உடையவன். மருவார் - சேராதவர், பகைவர். வணங்க
அதுவே தவமாம். வரும் பாடலில் ‘புல்கி ஏத்துமது புகழாகும்’
என்றதையும் காண்க.