3316. தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
  தன்னி லங்கவ டர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னி லங்க வுறுபிணி யில்லையே.         8

     8. பொ-ரை: இராவணனைச் செழுமையான கயிலைமலையின்
கீழ் அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான். அவர் நிலையாக
வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை நினைந்து போற்ற உடம்பில்
உறுகின்ற பிணி யாவும் நீங்கும்.

     கு-ரை: மன்னன் - மன்னனை. செழுவரை தன்னில் - கயிலை
மலையில்; அடர்த்துப் பின் அவனுக்கு அருள்செய்தவன் என்பது
இரண்டாமடியின் பொருள்.