3318. நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
  வலிய சொல்லினு மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திற முள்கவே
மெலியு நம்முடன் மேல்வினை யானவே.     10

     10. பொ-ரை: நன்மை அறியாத சமணர்களும், புத்தர்களும்
பிறரை வருத்தும் சொற்களை வலிய உரைத்தாலும் அவற்றைப்
பொருளாகக் கொள்ளாது, திருமழபாடியுள் வீரக்கழல்கள் ஒலிக்கத்
திருநடனம் புரியும் சிவபெருமானின் அருட்செயலை நினைந்து
போற்றினால் நம்மைப் பற்றியுள்ள வினையாவும் மெலிந்து அழியும்.

     கு-ரை: நலியும் - பிறரை வருத்துகின்ற. நன்று அறியா -
நீதியை அறியாத. உடல் மேல் வினை - உடலைப்பற்றிய பிழைகள்.