3323. |
இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால் |
|
நயம்வந்
தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே. 4 |
4.
பொ-ரை: தன்னை நாடோறும் தியானித்து வழிபடும்
அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக்கண்ணை
உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் நமச்சிவாய என்ற
திருவைந்தெழுத்தாகும். இனிமையான சொற்களால்
திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும்
அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன்
தூதன் பயப்படுவான்.
கு-ரை:
நியமம்தான் நினைவார்க்கு - தன்னை நாடோறும்
தியானிப்பதையே நியமமாகக்கொண்டு வழிபடும் அடியவர்கட்கு.
இனியான் -என்றும் நன்மை செய்பவனும். நெற்றி நயனன் -
நெற்றிக் கண்ணை உடையவனாகிய சிவபெருமானின். நாமம் -
திருப்பெயர் ஆகிய. நமச்சிவாயவே - ஸ்ரீ பஞ்சாட்சரத்தை. இதனை
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் என்ற அப்பர்
வாக்காலுமறிக. இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார் தமை
நண்ணினால் - இனிய சொல்லொடு நட்புக்கொண்ட பிறர், ஸ்ரீ
பங்சாட்சரத்தைச் செபிக்கும் பெரியோரைச் சேர்வரேல் அப்பிறர்
(செபிக்காதவர்) பக்கலில் சேர, இயமன் தூதரும் அஞ்சுவர்,
என்பது அஞ்செழுத்தைச் செபிப்போர்க்கே அன்றி அவரைச்
சார்ந்த பிறருக்கும் எமவாதை இல்லை என்பதாம்.
கொண்டதொண்டரைத்துன்னிலும் சூழலே என்ற காலபாசத்
திருக்குறுந்தொகையில் துன்னிலும் என்பதால் குறித்த பொருளது.
|