3324. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
  இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கயு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.             5

     5. பொ-ரை: கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக
இருப்பினும், நற்குணமும், பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர்
ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை
உச்சிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர்
என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறப்புடையது
எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின்
திருப்பெயரான ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: குணம் - நற்குணமும். பல நன்மைகள் - பல நல்ல
ஒழுக்கங்களும். இல்லாரேனும் - இல்லாதவராயினும். நல்லான் -
சிவபெருமானுக்கொரு பெயர். “நல்லானை நல்லான நான்மறையொடு
ஆறங்கம் வல்லானை” என்ற அப்பர் வாக்காலும் அறிக.