3325. மந்த ரம்மன பாவங்கண் மேவிய
  பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.     6

     6. பொ-ரை: மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து
பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்
களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும்.
அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி
என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ’நமச்சிவாய’
என்பதாகும்.

     கு-ரை: மந்தரம் அன - மந்தர மலைபோன்ற (பாவங்கள்).
மன்னிய - நிலை பெற்ற. பந்தனையவர் - பாசங்களால்
கட்டுண்டவர். அவர் தாமும் - அத்தகையோரும். பகர்வரேல் -
உச்சரிப்பார்களானால். வல்வினை சிந்தும் செல்வமும் மல்கும்
(பெருகும்) நந்தி - சிவபெருமான். “பேர்நந்தி உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகு” என்றார் அப்பர். முதலிரண்டடிக்குப் பாவங்கள்
பந்தனை இவையுடைய அத்தகையோரும் எனப் பொருள்
கோடலன்றிப் பாவங்கள் மன்னிய பாசங்களாற் கட்டுண்டவர்களும்
என ஓரிடத்திற்கு ஆக்குதலுமாம். மந்தரம் - பாற்கடல் கடைந்த
மலை.