3327. இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
  தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.        8

     8. பொ-ரை: இலங்கை மன்னனான இராவணன்
திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல, சங்கரன் தன்
காற்பெருவிரலை ஊன்றவும், கயிலையின் கீழ் நெருக்குண்டு
அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி,
நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின்
திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

     கு-ரை: அடுக்கல் - மலை. மலங்கி - திகைத்து;
“மலங்கினேன் கண்ணின் நீரைமாற்றி” என்பது திருவாசகம்.
வாய்மொழி செய்தவன் - வாயால் உச்சரித்தவன். உய்வகை
- பிழைக்கும்படியான வகை. நலம் கொள் - அத்தகைய
நன்மையைத் தன்கட் கொண்டதான.