3333. பரந்த நீலப் படரெரி வல்விடம்
  கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடம்
சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.         3

     3. பொ-ரை: விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக்
கண்டத்தில் தேக்கி நீலகண்டனாக இறைவன் வீற்றிருந்தருளும்
இடமாவது, ஓடையில் எருமை படிந்து பால் சொரியும் வளமிக்க
திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு அப்பெருமானை வணங்கி
வழிபடுங்கள்.

     கு-ரை: பரந்த - பரவிய. எரிவல்விடம் - கொதிக்கும் வலிய
நஞ்சு. சுரந்த - பால்சுரந்த, (மடியினையுடைய.) மேதி - எருமைகள்.
மேதி - பால்பகா அஃறிணைப்பெயர். சுரந்த மேதி - சினைவினை
முதல் மேலேற்றப்பட்டது. சொரிந்த பால் ஓடையில். நிரந்த -
பரவித் தோன்றும், தண்டலை நீணெறி என்க. (ஓடையில்) நிரந்த
என்ற எச்சத்திற்குச் (சொரிந்த) பால் என்னும் வினைமுதல்
வருவித்து உரைக்கப்பட்டது. ‘காலுண்ட சேற்று மேதிக் கன்றுள்ளி
கனைப்பச் சோர்ந்த பால்’ (கம்பராமாயணம் - நாட்டுப்படலம். 13)
என்ற கவியின் கருத்துக் கொள்க. நிரந்த - இயல்பு பற்றிய கால
வழுவமைதி.