3334. தவந்த வென்புந் தவளப் பொடியுமே
  உவந்த மேனியி னானுறை யும்மிடம்
சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.     4

     4. பொ-ரை: வெந்த எலும்பும், திருவெண்ணீறும் உவந்து
திருமேனியில் தரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,
சிவந்த பொன்னும், செழுமையான முத்துக்களும் மிகுந்த
திருத்தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து
இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

     கு-ரை: தவந்த - வெந்த, என்பும் - எலும்பும், தவளப்பொடி
- வெண்திருநீறு, தவந்த என்ற அடையை அடுத்தும் ஒட்டுக. வெந்த
வெண்ணீறணிந்து என்ற வாக்குங் காண்க. நிவந்த - மிகுந்த,
ஓங்கிய.