3336. கருவ ருந்தியி னான்முகன் கண்ணனென்
  றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடம்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.      9

     9. பொ-ரை: சிருட்டி செய்யும் பிரமன் திருமாலின் உந்திக்
கமலத்தில் தோன்றினான். அவனும், திருமாலும் தெரிந்து கொள்ள
முடியாத ஒப்பற்றவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது
போரில் முயன்ற கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய
கோயிலாகிய திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு
வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.

     கு-ரை: கருவரு உந்தியினான் - சிருட்டி எல்லாம்
தன்னிடத்தினின்று உண்டாக்கத்தக்க உந்தியினான், உந்தியில்
நான்முகன் தோன்றினான். செரு - போரில். வருந்திய - பகைவரை
வருந்துவித்த. கோச்செங்கட்சோழ நாயனார்நாட்டிய தண்டலை
நீணெறிநாயனார் ஆகையினால் நிருபன் என்னாது நிருபர் என்றார்.