3358. தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறும்
  கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனு மாலுநின்
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து                         வார்களே.       9

     9. பொ-ரை: தாவிச் செல்லும்இடபத்தை வாகனமாக
உடையவரே! தலைமை உடையவராய் நாடொறும் கோவண
ஆடையோடு கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள் செய்பவரே!
நெருப்புப் போன்று செந்நிறமான தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும், உம் முழுமுதல் தன்மையை
அறியாதவர்களாய்க் கலக்கம் உற்றார்கள்.

     கு-ரை: தாவண்ணம் - தாவும் தன்மை. தீவணம் மலர் -
செந்தாமரை மலருக்குத் தீவணம் நிறத்தால் உவமை. “எரியாத
தாமரை மேல் இயங்கினாலும்” (அப்பர்) “எரியகைந்ததன்ன
தாமரை நாப்பண்” எனவரும் புறநானூற்றாலும் அறிக.

     தூவணம் - பற்றுக் கோடாம் தன்மை. (புறம்)