3361. வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு
       வார்சடைத்
தேனைக்காவி லின்மொழித் தேவிபாக
     மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக
     வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேத
     மில்லையே.                       1

     1. பொ-ரை: வானிலுள்ள இருளைப் போக்கும்
வெண்மதியைச் சடையில் தாங்கி, தேன் போன்ற இனிய மொழி
பேசும் உமாதேவியைத் தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு,
திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைச் சரணாக
வாழ்பவர்கட்குத் தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாமல்
பிறதுணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் எதுவும் இல்லை.

     கு-ரை: வானை - செவ்வானத்தை; கா - காத்திருத்தல்போல.
வெண் மதி, மல்கு - ஒளிமிகும். புல்கு - பொருந்திய. வார்சடை,
செவ்வானம் சடைக்கு உவமை. கா - முதனிலைத் தொழிற்பெயர்.
இல் - ஐந்தன் உருபு ஒப்புப்பொருள். தேனைக்காவில் இன்மொழி
- தேனைக் கலந்துள்ள இனிமைதங்கிய மொழி. (காவில் காவுதலில்
உள்ள இனிமை. காவுதல் - கலந்திருத்தல்). அபயம் - சரண்;
புகலிடம் “வார்தல், போகல், ஒழுகல் மூன்றும், நேர்பும், நெடுமையும்
செய்யும்பொருள” என்பது தொல்காப்பியச் சூத்திரம் (சொல்.
சூத். 317.)ஏனைக்காவல் வேண்டுவார்.

     ஏதம் - தம்மைத்தாமே காத்துக்கொள்ள முடியாமற் பிற
துணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம். ஏதும் - எதுவும்,
ஆனைக்காவில் அண்ணலைச் சரணாக வாழ்பவருக்கு இல்லை.
வாழ்பவர் - நான்கன் உருபுத்தொகை. ‘ஐந்தவித்தான் ஆற்றல்’
என்புழிப்போல (திருக்குறள்)