3363. தாரமாய மாதரா டானொர்பாக
       மாயினான்
ஈரமாய புன்சடை ஏற்றதிங்கள்
     சூடினான்
ஆரமாய மார்புடை யானைக்காவி
     லண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள்
     மாயுமே.                            3

     3. பொ-ரை: தாரமாகிய உமாதேவியைத் தம் திருமேனியில்
ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். கங்கையைத் தாங்கிய
சடைமுடியில் சந்திரனையும் சூடியவர். சோழ அரசனின்
வேண்டுகோளுக்கிணங்க, அவனது தொலைந்த இரத்தின
மாலையைத் திருமஞ்சன நீரோடு தம் திருமார்பில் ஏற்றவர்.
திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை
அன்புடன் வணங்குவார்களின் தீவினைகள் யாவும் நீங்கும்.

     கு-ரை: வாரம் - உரிமை. ஆரம் ஆய மார்பு - என்றது,
உறையூர்க் காவிரித் துறையில் நீராடிய சோழ அரசர் ஒருவர் தமது
இரத்தின ஆரம் ஆற்றில் நழுவியதை யறிந்து இவ்வணிகலன்
ஆனைக்காவில் அண்ணலுக்கு ஏற்பதாகுக என்றனராக இங்குத்
திருவானைக்காத் திருமஞ்சனத்துறையில் நீர் சுமந்தோர்
இறைவனுக்கு விட்ட அந்நீரோடு அந்தமணி ஆரம் இறைவர்
திருமார்பில் விழ ஏற்றனர் என்னும் வரலாறு” ஆரம்
நீரொடேந்தினான் ஆனைக்காவு சேர்மினே” என வருவதும் காண்க.
(தி.3 ப.5. பா7)