3369. ஊனொடுண்ட னன்றென ஊனொடுண்டல்
       தீதென
ஆனதொண்ட ரன்பினாற் பேசநின்ற
     தன்மையான்
வானொடொன்று சூடினான் வாய்மையாக
     மன்னிநின்று
ஆனொடஞ்சு மாடினா னானைக்காவு
     சேர்மினே.                         9

     9. பொ-ரை: ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் நன்று
என்று சுவைமிகுந்த இறைச்சியைப் படைத்த கண்ணப்பநாயனாரின்
அன்பிற்கும், ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் அபசாரம்
அது தீது என மருண்ட சிவகோசரியார் அன்பிற்கும் கட்டுண்ட
தன்மையினனும், பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, சத்தியப்
பொருளாக என்றும் நிலைத்து நின்று, பசுவிலிருந்து பெறப்படும்
பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப் படுகின்றவனுமாகிய
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும்
திருத்தலத்தைச் சார்ந்து அவனை வழிபட்டு உய்யுங்கள்.

     கு-ரை: முதலீரடி கண்ணப்பநாயனார் வழிபாட்டையும்,
சிவகோசரியர் வழிபாட்டையும் குறிப்பன. வானொடு ஒன்று -
வானில் பொருந்துதலையுடைய (மதியை) சூடினான். ஒன்று -
ஒன்றுதலையுடைய மதிக்கு ஆனது தொழிலாகு பெயர். ஆனோடு
அஞ்சு - மூன்றனுருபு ஆறன் பொருளில்வந்த வேற்றுமை உருபு
மயக்கம்.