3374. |
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே |
|
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ. 3 |
3.
பொ-ரை: இறைவன் வெந்த சாம்பலை வாசனைப்
பொடியெனப் பூசியவர். தந்தையும், தாயுமில்லாதவர். தம்மை
இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர். அத்தகைய
எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால்
கூறுவது.
கு-ரை:
வெந்தசாம்பல் விரைஎனப் பூசி என்றது. (விரை -
வாசனை) தம் திருவுருவின் பேரொளிப்பிழம்பின் முன்,
(பிரளயகாலத்து) உலகெலாம் வெந்த ஒளி, ஒரு சிறு ஒளியாகவும்
சாலாமையை விளக்கி அதன் அறிகுறியாக அச்சாம்பலைச்
சாந்தாகப் பூசினர் என்றபடி. சிவம் - பேரொளிப் பிழம்பு.
அண்டம் ஆரிருளூடு கடந்து உம்பர், உண்டுபோலு மோர்
ஒண்சுடர் அச்சுடர், கண்டிங்கார் அறிவார், அறிவாரெலாம்
வெண்டிங்கட்கண்ணி வேதியன் என்பவே.தந்தையாரொடுதாய்
இலர் என்றது - உலகை ஒடுக்கி மீளத்தோற்று வித்தலால்,
உலகிற்குத்தாமே
தாயும் தந்தையும் ஆவதல்லது, தாம்
பிறப்பு. இறப்பு இல்லாதவர் என்றபடி. தம்மையே சிந்தியா
எழுவார் வினை தீர்ப்பவர் என்றதை, ஒளியாகிய தம்மை
நினைத்தலால், இருளாகிய வினை நீங்கச் செய்பவர் என்றபடி.
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ என்றது. அளப்பரும்
காட்சிப் பொருளாந்தன்மையை எவ்வகைக்கூற்றிலும் கூறமுடியாது
என்பதாம்.
|