3376. |
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் |
|
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே. 5 |
5.
பொ-ரை: இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே!
அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை
மிகுதியாகச் சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு
நோக்கப்புறத்தே சோதி வடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால்
ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன்.
அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப்
பிறவித்துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவன்
அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன்.
கு-ரை:
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க
வேண்டா என்றது - சிவன் ஒப்புயர்வற்ற பொருளாதலால்
ஏதுக்களுக்கும், எடுத்துக்காட்டுக்களுக்கும், அப்பாற்பட்டவன் -
அளந்தறிய முடியாதவன். ஏதுக்களாற் சோதித்தல் - அநுமானப்
பிரமாணத்தாலறிதல். எடுத்த மொழியாற் சோதித்தல் -
உரையளவையாற் சோதித்தறிதல், ஆகமப்பிரமாணமும், உவமைப்
பிரமாணமும் ஆம். சுடர்விட்டுளன் எங்கள் சோதி என்றது -
தன்னைக் காணலுறுவார் புறக்காட்சிக்கு அனற்பிழம்பாயும்,
அகக்காட்சிக்கு ஆழ்ந்த அன்பினாலும் நினைய உள் எழுந்த
சோதியாயும் விளங்குகின்றவன் என்றபடி. மாதுக்கம் நீங்கல் உறுவீர்
மனம்பற்றி வாழ்மின் என்றது - ஆதிச்சுடர்ச் சோதியாகிய அரனை
அன்பினால் மனத்தின்கண் பாலித்து, அறிவானந்த நோக்கோடு
அவனையே இடைவிடாது நோக்கி வாழ்ந்து பிறவித்துயர் நீக்குமின்
என்றபடி. சாதுக்கள் ... சார்மின்களோ என்றது - வேண்டும்
விருப்பம் எல்லாம் இறைவன் திருவடியே என்று பேரன்பினால்
போற்றுவீர், இறையே வந்து சார்மின் - கணப்பொழுதேனும்
அவன்பால் வந்து சார்மின் என்றபடி.
|