3379. வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
  ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை                              சொல்லே.   8

     8. பொ-ரை: வேதத்தை அருளிச் செய்தவனாய், வேதப்
பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு,
குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர்
அவனைப் போற்றிசைக்க, பூத நாயகனான அவனைப் போற்றிச்
சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும்
ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும்.

     கு-ரை: வேதமுதல்வன்... ...சொல்லே என்றது:- பதினெண்
புராணங்களும் - சிவ பரத்துவம் சொல்வனவே, உலகத்தவர்,
ஏதப்படாமை - ஒழுக்க நெறி தவறுதலாகிய குற்றம் அடையாமைப்
பொருட்டுக் கூறிய இப்புராணங்கள் ஓதியுணரத்தக்கன என்றவாறு.
(சூதன் - சூதபுராணிகர்) ஒலிமாலை - உண்மைக் கருத்துக்களை
விரிவுறக் கூறும், நூல் வரிசைகள் எனப்பொருள்படும். கலிக்கோவை
- புராணங்கள்.