| 
       
         
          | 3380. | பாராழி 
            வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப் |   
          |  | பேராழி 
            யானதிடர் கண்டருள் செய்தல் பேணி நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
 போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.        9
 |  
            9. 
        பொ-ரை: கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட, அவர்கள் துன்பத்தை
 அறிந்து அருள் செய்ய விரும்பி, தான் கண்துயிலும் கடலைவிட்டுப்
 பூமிக்கு வந்து, தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு
 அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப்
 பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது
 மெய்யான புகழ் அன்றோ?
       கு-ரை: 
        நலிந்து ஆட்ட - நலிவுறுத்தி அலைக்கப்பட, ஆடி - அலைந்து. இடர் கண்டு - துன்பத்தை அறிந்து, அருள் செய்தல்
 பேணி - அதற்கு அருள் செய்யுங்கடமையைக் கருதி, போர்
 ஆழிஈந்தபுகழ் - போர்க் கருவியாகிய சக்ராயுதத்தையன்றோ? நீர்
 ஆழிவிட்டு ஏறி - கண்துயிலும் கடலை விட்டுப் பூமிக்கு வந்து,
 நெஞ்சு இடம் கொண்டார்க்கு - தம்மைத் தன் நெஞ்சிடத்திற்
 கொண்ட திருமாலுக்கு, நெஞ்சிடம் கொண்டார். தியாகேச
 மூர்த்தியைத் திருமால் தனது இருதயத்திற் பூசித்துவந்தமையும்,
 பின் இந்திரன் பால்வந்த அம்மூர்த்தி முசுகுந்த சக்கரவர்த்திமூலம்
 திருவாரூரில் எழுந்தருளினரென்பதும் வரலாறு.
 |