3385. இடியா ரேறுடையா யிமையோர்தம்
       மணிமுடியாய்
கொடியார் மாமதியோ டரவம்மலர்க்
     கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மி
     யூருறையும்
அடிகே ளுன்னையல்லா லடையாதென
     தாதரவே.                           2

     2. பொ-ரை: இடிபோல் முழங்கும் இடபத்தை வாகனமாக
உடையவனே! தேவர்கள் தங்கள் மணிமுடி உன் திருப்பாதத்தில்
படும்படி வணங்க அவர்கட்கு வாழ்வளிக்கும் முதற்பொருளே!
இடபக்கொடியும், சந்திரனும், பாம்பும், கொன்றைமலரும் உடைய
இறைவனே! செடிகளோடு கூடிய மாதவி மலரின் மணம் சூழ்ந்த
திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தலைவனான சிவபெருமானே!
உன்னைத் தவிர என் மனம், ஆதரவாக வேறெதையும் அடையாது.

     கு-ரை: இடி ஆர் ஏறு - இடியைப்போல் ஒலிக்கும் ஏறு.
ஆர்த்தல் - ஒலித்தல். கொடி - ஒழுங்கு. செடி ஆர் மாதவி -
செடிகளோடு கூடிய மாதவி முதலிய தருக்கள் சூழ்திருவான்மியூர்.
மாதவி ஏனை மரங்களையும் தழுவலால் உபலட்சணம்.