3388. கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி
       மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில்
     வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மி
     யூருறையும்
அண்ணா வுன்னையல்லா லடையாதென
     தாதரவே.                           5

     5. பொ-ரை: நெற்றிக்கண்ணை உடையவனே! கதிர்போல்
ஒளிரும் திருமேனி மீது திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவனே!
அழகிய சோலைகள் சூழ்ந்த உறுதியான மதில்களை உடைய
திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தந்தையே! உன்னையல்லால்
என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

     கு-ரை: எண் ஆர் - பாராட்டுதற்குரிய, பொடி நீறு -
பொடியாகிய திருநீறு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
அண்ணா - தந்தையே, திசைச்சொல். அண்ணல் என்பதன்
விளியுமாம்.