3397. பாரிடம் விண்ணுமெங்கும் பயி னஞ்சு
       பரந்துமிண்டப்
பேரிடர்த் தேவர்கணம் பெரு மானிது
     காவெனலும்
ஓரிடத் தேகரந்தங் குமை நங்கையொ
     டும்முடனே
பேரிட மாகக்கொண்ட பிர மாபுரம்
     பேணுமினே.                       4

     4. பொ-ரை: நிலவுலகிலும், விண்ணுலகிலும் எங்கும் பயின்ற
விடமானது பரவிப் பெருக, அதனால் பெருந்துன்பத்திற்குட்பட்ட
தேவர்கள் அனைவரும், “பெருமானே! காப்பாற்றுவீர்களாக” என்று
பிரார்த்திக்க, அவ்விடத்தைக் கண்டத்தில் கரந்து அருள்புரிந்த
அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற பெருமை
மிகுந்த திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
வழிபடுவீர்களாக.

     கு-ரை: மிண்ட - அதிகரிக்க. இதுகா - இதனின்றும்
காத்தருள்க. ஐந்தனுருபுத்தொகை. ஓரிடத்தே - கண்டமாகிய
ஓரிடத்தே, கரந்தான்.