3398. நச்சர வச்சடைமே னளிர் திங்களு
       மொன்றவைத்தங்
கச்ச மெழவிடைமே லழ கார்மழு
     வேந்திநல்ல
இச்சை பகர்ந்துமிக விடு மின்பலி
     யென்றுநாளும்
பிச்சைகொ ளண்ணனண்ணும் பிர மாபுரம்
     பேணுமினே.                      5

     5. பொ-ரை: இறைவன் விடம் பொருந்திய பாம்பைச்
சடைமுடியில் தரித்து, குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும்
அதனுடன் ஒன்றி இருக்குமாறு செய்தவன். அழகிய இடப
வாகனத்தின் மீது அமர்ந்து அச்சம் தரும் மழுப்படையை
ஏந்தியவன். இன்மொழிகள் பேசி ‘மிக இடுங்கள்’ என்று
நாள்தோறும் பிச்சை ஏற்கும் தலைவனாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப்
போற்றி வழிபடுவீர்களாக!

     கு-ரை: நச்சரவம் - நச்சு + அரவம். நளிர் - குளிர்ந்த.
அங்கு - அசை.

     ‘போர்த்தாய் அங்கு ஓர் ஆனையின்தோல்’ என்புழிப்போல்
(தி.4.ப.1.பா.10.) அச்சம் எழ மழு ஏந்தி என்க, மிக இச்சை பகர்ந்து
எனவும், பலிஇடுமின் எனவும் மாற்றுக.