3401. இமையவ ரஞ்சியோட வெதிர் வாரவர்
       தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன் னடர்த் தும்மலை
     யன்றெடுப்பக்
குமையது செய்துபாடக் கொற்ற வாளொடு
     நாள்கொடுத்திட்
டுமையொ டிருந்தபிரான் பிர மாபுர
     முன்னுமினே.                         8

     8. பொ-ரை: தேவர்கள் அஞ்சியோடத் தன்னை எதிர்ப்பவர்
யாருமில்லாது அமைந்த வல்லசுரனாகிய இராவணன் பண்டைக்
காலத்தில் கயிலையைப் பெயர்த்து எடுக்க, சிவபெருமான் தன்
காற்பெருவிரலை ஊன்றி அவன் அம்மலைக்கீழ் நசுங்கும்படி துன்பம்
செய்து, பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாடித் துதிக்க,
அவனுக்கு வெற்றிதரும் வாளொடு, நீண்ட வாழ்நாளும் கொடுத்து
அருள்செய்து, உமாதேவியாரோடு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம்
என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.

     கு-ரை: அடர்த்து - மோதி, குமை (அது) செய்து -
குழைத்தல் செய்து, குழைத்து, அது - பகுதிப்பொருள் விகுதி. பாட
- பாடினதினால், உன்னுமின் - நினையுங்கள்.