3403. துவருறு மாடையினார் தொக்க பீலியர்
       நக்கரையர்
அவரவர் தன்மைகள்கண் டணு கேன்மின்
     னருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக் கழி காலமெல்
     லாம்படைத்த
இவரவ ரென்றிறைஞ்சிப் பிர மாபுர
     மேத்துமினே.                       10

     10. பொ-ரை: மஞ்சட்காவி ஊட்டப்பட்ட ஆடையணிந்த
புத்தர்களும், தொகுத்துக் கட்டிய மயிற்பீலியைக் கையிலேந்தி
யவராய், ஆடையில்லாத இடையையுடைய சமணர்களும்,
இறையுண்மையை அறியாதவர்களாதலால் அவர்களை அணுகாதீர்.
திருவருள் பெற விரும்பும் அடியார்களே! ஐயம் பல நிறைந்த
மனத்தை ஒருமுகப்படுத்தி, சென்ற காலம் முதலிய எல்லாக்
காலத்தையும் படைத்த முழுமுதற்கடவுள் சிவபெருமான் என்று
வணங்கி, அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும்
திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.

     கு-ரை: தொக்க - தொகுத்துக்கட்டிய, நக்கரையர் - நக்க -
அரையர் என்பதன் மரூஉ. நக்கம் - நக்நம் ஆடையின்மை,
அரையர் - இடுப்பையுடையவர், அணுகேன்மின் அருள் பெறுவீர் -
அருள்பெற விரும்புவீர் அணுகாதீர்கள். கழிகாலம் - சென்ற காலம்
முதலிய, எலாம் - எல்லாத் தத்துவங்களையும் படைத்த, இவரவர்
என்பதனை அவர் இவர் என மாற்றி - அந்தப்பரம்பொருள்
பிரமாபுரத்தில் எழுந்தருளிய இறைவனென்று பொருள் கொள்க.