3405. விடையவன் விண்ணுமண்ணுந் தொழ நின்றவன்
       வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோ லுடை கோவணம்
     பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன் சசி தங்கிய
     சங்கவெண்டோ
டுடையவன் னூனமில்லி யுறை யும்மிட
     மொற்றியூரே.                     1

     1. பொ-ரை: சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன்.
விண்ணுளோரும், இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற
விளங்குபவன். கறைபடியாத மழுப்படை உடையவன். பாயும்
புலித்தோலுடையும், கோவணமும் உடையவன். பலவிதமான
மலர்களைச் சடையில் அணிந்தவன். சாமகானப் பிரியன்.
சந்திரனைச் சடையில் தாங்கி, சங்கினால் ஆகிய வெண்மையான
தோடு என்னும் காதணி அணிந்தவன். குறைவில்லாத அப்பெருமான்
தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும்
குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம்
திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.

     கு-ரை: வெண்மழு - இரத்தக்கறை தோய்தலின்மையினால்
வெண்மையாகவுள்ள மழு. மழு - மழுவாள் எனவும் படும்.
ஆகையினால் மழுவாள் படையவன் என்றார். படை - ஆயுதம்.
சசி தங்கிய சந்திரனைப் போன்ற, வெண்சங்கத்தோடு, உடையவன்.
தங்கிய - உவமவாசகம். அடைந்தவர்க்கு ஊனம் இல்லையாகச்
செய்பவன்.